அருள்ஜோதி ❤️
Harry Gowtham
9/3/2025
அப்பொழுது தான் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் (FOP) தமிழகத்தில் ஆரம்பித்து ஐந்து வருடங்களுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தது. காவல் நிலையங்களுக்கு உட்பட்டு இருக்கும் ஒவ்வொரு ஊரிலிருந்தும் சமூக சேவை மனப்பான்மை உள்ள ஆட்களை இணைத்து Friends of Police என்ற இந்த சமூகக் காவல் (Community Policing) குழுக்கள் ஆரம்பிக்கபட்டது.
அது ஆரம்பிக்க பட்ட நோக்கம் பலவாக இருந்தாலும், அவர்களின் பொதுவான பணி அந்த ஊரில் நடக்கும் திருவிழாக்கள் மற்றும் அதிகமாக கூட்டம் வரும் பொது நிகழ்ச்சிகளில் காவலர்களுடன் இணைந்து பந்தோபஸ்து பணி (Bandobast Duty) செய்ய வேண்டும். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தும் பொழுது அவர்களுக்கு துணையாகவும், வேலை பளுவை குறைக்கவும், குற்ற செயல்களில் ஈடுபட்டால் இவர்கள் மூலம் எந்த ஊர் காரர்கள் என்பதை கண்டுபிடிக்கவும் இக்குழு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இது முற்றிலும் சமூக சேவை சேர்ந்த பணியாக மட்டும் தான் இருந்தது ஏன்னென்றால் இதற்க்கு எந்த சம்பளமோ, பேட்டாவோ, குடுக்கப்பட மாட்டாது, உணவு மட்டும் பணி செய்யும் நாட்களில் வழங்கப்படும்.
ஊரிலிருந்து எங்கள் அம்மா உட்பட என் அம்மாவின் நண்பர்கள், பக்கத்துக்கு வீட்டு அக்கா, அண்ணன்கள் என்று சிலர் FOPல் சேர்ந்திருந்தார்கள், அப்பொழுது நான் ஆறாவது என் அக்கா எட்டாவது படித்துக்கொண்டிருந்தோம்.
எங்கள் ஊர் திருச்செங்கோட்டில் நடக்கும் மிகப்பெரிய அர்த்தநாரீஸ்வரர் தேர் திருவிழா, சின்ன ஓங்காளியம்மன் திருவிழா, தடுப்பூசி முகாம், மிக முக்கியமான நபர்களின் (VIP) திடீர் வருகை, பயிற்சி முகாம், அதற்கென்று கலந்தாய்வு சந்திப்பு என்று கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் எதோ ஒரு காரணத்திற்காக நானும் அக்காவும் அம்மாவுடன் காவல் நிலையம் சென்று அம்மா வரும் வரை காத்திருப்போம் இது எங்களுக்கு விவரம் தெரியும் வரையில் நடந்தது கிட்டத்தட்ட வருடம் 1999 லிருந்து 2004 வரை. அப்படி அம்மாவின் நண்பர்கள் என்று பல ஊரில் இருக்கும் அண்ணன்கள் அக்காக்கள் பலரை எங்களுக்கு தெரிய ஆரம்பித்தது.
ஒரு முறை வீட்டின் அருகில் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த பொழுது ஆட்டோ விளம்பர காகிதங்களை வீசியபடி வந்தது, பின்னாடியே நாங்கள் ஓடினோம், திடீர் என்று ஆட்டோ நிறுத்தி உள்ளே இருந்து ஒரு அண்ணன் வெளியே வந்தார் அவரை எங்கயோ பார்த்த மாதிரி இருந்தது சரி என்று விளம்பர காகிதங்களை வாங்கிவிட்டு மறுபடியும் நண்பர்களுடன் விளையாடிவிட்டு மதியம் சாப்பிட வீட்டுக்கு சென்றேன், அங்கு அந்த அண்ணன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் இருந்தார், நான் எங்க அம்மாவை பார்த்தேன், டேய் ஜோதி அண்ணா டா FOPல பார்த்துருப்பியேன்னு சொன்னார் அப்பொழுது தான் எனக்கு நியாபகம் வந்தது.
எங்க அப்பா சொன்னார், அவரின் முதன்மை தொழில் ஆட்டோவில் ஊர் ஊரக சென்று விளம்பர காகிதங்களை விநியோகித்து மைக்கில் பேசியபடி விளம்பரம் செய்வது என்று.
ஆனால் ஜோதி அண்ணன் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக பண்ணுவார், மற்றவர்கள் போல் காலையில் ஆரம்பித்து மாலை வரை மைக்கில் பேசி ஆற்றலை வீணடிப்பார்கள் ஆனால் இவர் விளம்பரம் ஒப்பந்தம் கிடைத்ததும் கேசட் கடைக்கு சென்று அந்த விளம்பரத்தை ஆட்டோவில் பேசுவது போல் இவரே பேசி பதிவு செய்து கேசட்டகா வைத்துக்கொள்ளுவார். விளம்பரம் செய்ய ஊருக்குள் ஆட்டோவில் செல்லும்போது அந்த பதிவு செய்த கேசட்டை போட்டு ஒலிக்கவிட்டு ஹாயாக படுத்துக்க கொள்வார்.
எங்க அப்பா சொன்னார், “நான் சின்ன வயசா இருக்கும் பொழுதே ஜோதி அண்ணன் குதிரை வண்டியில் விளம்பரம் செய்ததை பார்த்திருக்கிறார் என்று” அந்தளவுக்கு ஆட்டோ விளம்பரம் செய்வதில் நெடிய அனுபவம் உள்ளவர்.
எங்க அப்பாவை விட வயதில் மூத்தவர், தன் வாழ் நாள் முழுவதும் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருந்தவர். காங்கிரஸ்காரர், மோகன் குமாரமங்கலம், ரங்கராஜன் குமாரமங்கலம் அவர்களின் தீவிர பற்றாளர், எப்பொழுதும் அவரின் வாக்கு கை சின்னத்திற்கு தான். எப்பொழுதும், வெள்ளைச் சட்டை, காக்கி பேண்ட், தொப்பி சகிதமாய் தான் இருப்பார், அவர் தொப்பியை கழற்றி நாங்கள் பார்த்ததே இல்லை.
விளம்பரம் தொழில் போக மீதி நேரங்களில் காவல் நிலையங்களில் தான் இருப்பார், அவருக்கு FOP தவிர அங்கு வேற எந்த பணியும் இல்லை ஆனால் அதில் ஏற்பட்ட காவல் அதிகாரிகளின் அறிமுகத்தால் அங்கேயே குடி கொள்ள ஆரம்பித்தார், அதனாலேயே நகராட்சி, தாசில்தார், கிராம நிர்வாக என அணைத்து அலுவலக சுற்றுவட்டார ஆட்களுக்கும் இவரை தெரியும்.
அன்று மதியம் ஜோதி அண்ணன் சாப்பிட்ட பிறகு அம்மா சொன்னார்கள் ‘அண்ணா சாப்பாடு வேணும்னா எப்ப வேணுனாலும் வந்து வீட்டுக்கு வந்த சாப்பிட்டு போனுன்னு’. ஜோதி அண்ணனுக்கு என்று என்று யாரும் இல்லை, அவரின் அண்ணன் மட்டும் கரூரில் இருப்பதாக சொல்வார் ஆனால் பல வருடங்களாக திருச்செங்கோட்டில் அவர் மட்டும் தனியாகவே தான் வாழ்ந்து வந்தார்.
அதற்க்கு சில வாரங்களுக்கு பிறகு தினசரி காலை ஏழு மணிலிருந்து ஏழரை மணிக்குள் சைக்கிளில் வீட்டுக்கு வந்து விடுவார். வரும் பொழுது பால் பாக்கெட், வரிக்கி, தினத்தந்தி பேப்பர் இந்த மூன்றும் கட்டாயம் இருக்கும். காலை சாப்பிட்டுவிட்டு மதியத்துக்கும் சாப்பாடு கட்டிக் கொள்வார்.
இங்கு தான் எனக்கும் என் அக்காவுக்கு என்று ஆசைப்பட்ட நிறைய மாற்றங்கள் நடந்தது.
எங்கள் பெற்றோர்கள் இருவரும் வாரச் சம்பளக்காரர்கள் அடிப்படை தேவைகளைத் தான் அவர்களால் பூர்த்தி செய்ய முடிந்தது, நாங்கள் ஆசைப்பட்டது கிடைக்க பல காலம் காத்திருக்க வேண்டும் சில சமயங்களில் கிடைக்காமலும் போகலாம்.
ஆனால் ஜோதி அண்ணன் வந்த பிறகு அந்த வயதிற்கு நாங்கள் அடிப்படையாக ஆசைப்பட்ட அனைத்தையும் "தன் தங்கை பிள்ளைகளுக்கு, ஒரு தாய் மாமா செய்வது போல் எங்களுக்கு செய்தார்."
பிறந்த நாட்களுக்கு கேக் எல்லாம் வெட்டுவோம் என்று நாங்கள் நினைத்து பார்த்தது கூட இல்லை, எங்களின் இருவரின் பிறந்த நாளுக்கும் புது துணிகளை எடுத்து, கேக், சாக்லேட் வாங்கி கொண்டு வருவார். கேட்கும் போதெல்லாம் நோட்டு புத்தங்கங்கள், ஸ்டேஷனரி என்று கணக்கு வழக்கு இல்லாமல் வாங்கி கொடுப்பார்.
இதில் தீபாவளி தான் அடிப்பொலி, பட்டாசு எல்லாம் விலை அதிகம், அவர் வருவதற்கு முன்பு கொள்ளு பட்டாசு, சிறிய மத்தாப்பு, சிறிய பிஜிலி வெடி என்று குறைந்த பட்டாசுக்கள், ஆனால் ஜோதி அன்னான் வந்த பிறகு ரோல் கேப் & துப்பாக்கி, பெரிய மத்தாப்புகள், பெரிய நெனப்பரிசு (புஷ்வானம்), பெரிய சங்குசக்கரம் என்று ஆசை தீர பட்டாசுகள் வாங்கி கொடுப்பார். அத்துடன் புதிய துணிமணிகள், காரம் ஸ்வீட் என்று தீபாவளி ஒரே கொண்டாட்டம் தான் எங்களுக்கு.
நீங்கள் நடுத்தர வர்க்கமாக இருந்து அரசு பள்ளியில் படித்திருந்தால் இது உங்களுக்கு புரியும், சாதிச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் அந்தந்த அலுவலங்களுக்கு சென்று வாங்குவது எவ்வளவு கடினம் என்று, விண்ணப்பத்தை கையில் வைத்துக்கொண்டு பல மணி நேரம் காத்துக் கொண்டிருப்போம் எங்கு சென்று யாரிடம் வாங்குவது என்று தெரியாமல் இருப்போம் ஆனால் ஜோதி அண்ணன் வந்த பிறகு அது எங்களுக்கு வீடு தேடி வரும், அவரே அதிகாரிகளிடம் சென்று கையெப்பம் பெற்று அடுத்த நாள் எங்களுக்கு கொடுப்பார்.
இப்படியே சில வருடங்கள் போனது, ஜோதி அண்ணன் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பார், ஏதாவது கார் ட்ரைனிங், டைப்ப்ரைட்டிங் கிளாஸ் போலாமே என்று, அதை நாங்கள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை எங்களுக்கு அது என்னவென்று தெரியவுமில்லை, நான் பத்தாம் வகுப்பு முடித்திருந்த நேரம், சும்மா சொன்னார் டைப்ரைட்டிங் சேர்த்தி விடுறேன் போறீயா என்று?! அப்பொழுதுதான் ஆசை துளிர் விட்டது, உடனே சரி என்றேன், சாயங்காலம் போலீஸ் ஸ்டேஷன் வந்திரு என்றார்.
எனக்கு தெரியாது என் வாழ்க்கை இங்க இருந்து மாறப்போகிறது என்று.
சாயங்காலம் சென்று அவரைச் சந்தித்தேன், ஸ்ரீ கிருஷ்ண டைப்ரைட்டிங் இன்ஸ்டிடூட்டுக்கு கூட்டிச் சென்றார், அங்கு படி ஏறும் போதே டைப் அடிக்கும் சத்தம்! உள்ளே சென்று சேர்ந்து கொண்டேன், நாளையிலிருந்து வரச் சொல்லி A4 சீட் ரெண்டு பேப்பர் வாங்கிட்டு வரச் சொன்னார்கள்.
அடுத்த நாளிலிருந்து கிளாஸ் வர ஆரம்பித்தேன், கிளாஸ் முடிந்த பிறகு ஜோதி அண்ணாவை சென்று சந்தித்தேன்,
இரண்டு போண்டா, ஒரு டீ வாங்கி குடுத்து விட்டு கையில் பத்து ரூபாய் கொடுத்தார். அந்த பத்து ரூபாயை நான் எதிர்பார்க்கவில்லை.
அடுத்த நாள் கிளாஸ் முடிந்த பிறகு போய் பார்த்தேன் ரெண்டு போண்டா, ஒரு டீ, கையில் பத்து ரூபாய் கொடுத்தார்.
அதற்கடுத்த நாள் என்று இப்படியே தினமும் கிளாஸ் முடித்துவிட்டு அவரைச் சந்திப்பேன் ரெண்டு போண்டா, ஒரு டீ, கையில் பத்து ரூபாய் கொடுப்பார்.
தினமும் பத்து ரூபாய் என்பது எனக்கு பெரிய பாக்கெட் மணி, வெறும் பத்து ரூபாய் என்று சாதாரணமாக நினைக்காதீர்கள்.
ஆண்டு 2004 காலகட்டங்களில் டீ ரூபாய் 2.50 காசு, வெஜ் பப்ஸ் 3 ரூபாய், பாயா (மசால் பாணி பூரி) 3 ரூபாய், ஆனந்த விகடன் 7 ரூபாய், சிக்கன் சில்லி 8 ரூபாய், ஹீரோ பேணா 35 ரூபாய் தான்.
இன்னும் நிறைய சொல்லலாம்
"அந்த டைப்ரைட்டிங் கிளாஸ்னாலதான் என் வாழ்க்கை நிறைய மாறியது, அதன் மூலம் தான் நான் வெளியுலகை பார்க்க ஆரம்பித்தேன்"
நிறைய அண்ணன்கள், அக்காக்கள், நண்பர்கள் கிடைத்தார்கள், முக்கியமாக எனக்கு பெண் தோழிகள் அங்க இருந்து தான் கிடைக்க ஆரம்பித்தார்கள், இவர்கள் மூலம் நான் நிறைய இடங்களுக்கு பயணிக்க ஆரம்பித்தேன்,
ஆனந்த விகடன் வாங்கி படிக்க ஆரம்பித்தேன், பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போதே TNPSC குரூப் 4 தேர்வு எழுதினேன். கம்ப்யூட்டர் கற்க ஆரம்பித்தேன், 2004 லிலே Yahoo தளத்தில் மின்னஞ்சல் முகவரி (Email Address) உருவாக்கி வாரத்தில் மூன்று நாட்கள் கம்ப்யூட்டர் பிரவுசிங் சென்டர் சென்று கொண்டிருந்தேன், அப்பொழுதே புத்தக பையில் ப்லாப்பி டிஸ்க் (Floppy Disk) வைத்திருப்பேன், 2006 தொடக்கத்திலே பெண் டிரைவ் (Pen Drive) வைத்து கொண்டு பள்ளியை சுற்றி வருவேன், நண்பர்கள் எல்லாம் என்னை வியப்புடன் பார்ப்பார்கள்.
தியேட்டரில் பத்து ரூபாய் தான் டிக்கெட் அதனால் விரும்பிய திரைப்படங்களை பார்க்க முடிந்தது. புதியதாக வெளியான திரைப்படங்களுக்கு மட்டும் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் தாமதமாகதான் விடுவார்கள் ஆனாலும் பத்து ரூபாய் தான் டிக்கெட்.
அந்த கால கட்டத்திதில் தான் மஞ்சள் கலர் STD பூத்களை காலி செய்ய ஒரு ரூபாய் டெலிபோன் காயின் பாக்ஸ் வந்தது, ஒரு ரூபாயில் தமிழ்நாடு முழுவதும் பேசலாம்.
நினைத்த போதெல்லாம் தோழிகளிடம் பேசினேன்,
நினைத்த போதெல்லாம் பிடித்த தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்டேன்,
நினைத்த போதெல்லாம் திரைப்படம் சென்று பார்த்தேன்,
எல்லாம் அந்த பத்து ரூபாய் செய்த செயல்.
இதற்கிடையில் ஜோதி அன்னான் எங்கள் வீட்டிற்கு வருவதில்லை, இருந்தாலும் டைப்ரைட்டிங் கிளாஸ் முடிந்து அவரை சென்று பார்ப்பேன். பல நாட்களில் அவரிடம் காசு இல்லாதா நிலை இருந்தது அதை எல்லாம் அவர் வெளிக்காட்டிக் கொள்ளவே மாட்டார். கடன் சொல்லி டீ வாங்கி குடுத்துவிட்டு அந்த கடைக்காரிடமே பத்து ரூபாய் வாங்கி கொடுத்து அனுப்புவார்.
அதற்கு பிறகு நான் பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்தேன், கல்லூரி முடிந்தவுடன் பகுதி நேர வேலைக்கு சென்று சேர்ந்து கொண்டேன். பகுதி நேர வேலைக்கு சென்றாலும், நான் டைப்ரைட்டிங் கிளாஸ் செல்வதையும் நிறுத்த வில்லை, ஜோதி அண்ணனிடம் சென்று பத்து ரூபாய் வாங்குவதையும் நிறுத்தவும் இல்லை.
கல்லூரி இரண்டாம் ஆண்டு முடிந்தவுடன் டைப்ரைட்டிங் கிளாசில் இருந்து என் அத்தியாயமும் முடிவு பெற்றது.
ஜோதி அண்ணனிடம் இருந்து பணம் வாங்குவதும் முடிவுக்கு வந்தது.
ஜோதி அண்ணனிடம் இருந்து இரண்டு போண்டா, ஒரு டீ, கையில் பத்து ரூபாய் என்று ஒரு மாதம், இரண்டு மாதங்கள் அல்ல கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் வாங்கி கொண்டு தான் இருந்திருக்கிறேன்.
அந்த நான்கு வருடங்களில் முதலில் ஆங்கிலத் தட்டச்சு – கீழ்நிலை முடித்தேன், பிறகு ஆங்கிலத் தட்டச்சு – மேல்நிலை முடித்தேன், கணினியில் மூன்று மாதம் அடிப்படை Diploma Computer Application வகுப்பு. அப்புறம் தமிழ் தட்டச்சு கீழ்நிலை, கணினியில் Hardware & Networking சான்றிதழ் படிப்பு, தமிழ் தட்டச்சு மேல்நிலை என்று தொழில்நுட்ப சான்றிதழ் படிப்புகளை முடித்திருந்தேன். அந்த நான்கு வருடங்களுக்கும் மாதம் மாதம் அவர் தான் டைப்ரைட்டிங் கட்டணத்தை செலுத்தினார்.
பெற்றோர்கள் படிப்பு சம்பந்தமாக பணம் கேட்டல் தருவார்கள் ஆனால் செலவுக்கு காசு தர மாட்டார்கள், அந்த கோர்ஸ் முடிக்கும் வரை இதரா செலவுகளுக்கு ஜோதி அன்னான் கொடுத்த பத்துரூபாய் தான் என்னை தோழிகளுக்கும், நண்பர்களுக்கும் மத்தியில் தைரியமாக ஒரு டீ கடைக்கோ, மற்ற இடங்களுக்கோ தயங்காமல் துணிந்து போக செல்ல முடிந்தது.
நினைத்துப் பார்க்கிறேன், பதினாறு வயதில் இருந்து, 21 வயது வரை என் வாழ்க்கையின் முக்கியமான கால கட்டத்தில் ஜோதி அன்னான் உடன் இருந்திருக்கிறார்.
பள்ளி முடிந்ததும் என் நண்பர்கள் வெட்டியாக பஸ் ஸ்டாண்டை 2 மணி நேரம் சுற்றிவிட்டு 6.30 மணி பஸ்ஸுக்கு வருவார்கள், நானோ உருப்படியாக டைப்ரைட்டிங் முடித்துவிட்டு பஸ்சுக்கு வருவேன்.
அவர் இல்லையென்றால், ஒன்று என் வகுப்பு நண்பர்களுடன் சேர்ந்து தம்மு தண்ணி என்று கேட்டு வீணாக போயிருப்பேன், இல்லையென்றால் என் ஊர்கார பசங்களுடன் சேர்ந்து சுற்றியிருப்பேன். உருப்படியாக டைப்ரைட்டிங், கம்ப்யூட்டர் கோர்ஸ் என்று எதையும் பயின்றிருக்க மாட்டேன், நண்பர்கள், என்னை வழி நடத்திய அண்ணன்கள் என்று யாரும் எனக்கு கிடைத்திருக்க மாட்டார்கள். பல இடங்களுக்கு சென்றிக்க மாட்டேன், விரும்பிய திரைப்படம் பார்த்திருக்க மாட்டேன்.
என் வாழ்வே மாறியிருக்கும்!
நான் டைப்ரைட்டிங் முடித்ததால் தான், கம்ப்யூட்டர் கற்றுக்கொண்டேன், கம்ப்யூட்டர் கற்றதுனால் தான் ஆர்ட்ஸ் குரூப் எடுத்த நான் கல்லூரியில் B.Sc Computer Science எடுத்தேன், நடுவில் சரியான வாய்ப்புகளை பயன்படுத்த தவறினாலும் இப்பொழுது பெங்களூரில் ஐடி துறையில் நல்ல சம்பளத்தில் பணிபுரிகிறேன்.
அவர் இல்லையென்றால் இந்த பாதை எனக்கு கிடைத்திருக்குமா? இல்லை இன்னும் வேறு பாதையில் திசை மாறி போயிருப்பேனோ? என்று என்னால் கணிக்க முடியவில்லை ஆனால் நிச்சயம் இதைவிட கடினமாக இருந்திருக்கும் நிச்சயம் கஷ்டப்பட்டிருப்பேன்.
கணினி பயின்ற எல்லோரும் கணினியை தைரியமாக இயக்க மாட்டார்கள், 60 வயது முதியவர்கள் போல் மௌசை (Mouse) நகர்த்திக்கொண்டு போவார்கள் ஆனால் நான் கம்ப்யூட்டரில் படம் காட்டுவேன், ஏனென்றால் நான் டைப்ரைட்டிங் முடித்திருந்தேன் அது மட்டும் இல்லாமல் அந்த கால கட்டத்தில் MS Office (Word, Excel, PowerPoint, Access) என்று 99 சதவீதம் மௌஸ் (Mouse) பயன்படுத்தாமல் கீபோர்ட்'யிலேயே இயக்குவேன்.
நான் பத்தாவது முடித்ததிலிருந்து இப்பொழுது வரை அதாவது 22 வருடங்கள் நான் கணினியை வேகமா இயக்கி விரைவாக வேலையை முடிப்பதிலிருந்து, பெண்களிடம் எப்படி பேசுவது, சபை நாகரிகம் எப்படி கடைப்பிடிப்பது, எங்கெல்லாம் தவறு செய்ய கூடாது, எப்படியெல்லாம் எங்கெல்லாம் சென்று கற்றுக் கொள்ள வேண்டும், கல்வி, வேலை, வாழ்க்கை என்று பல அனுபவங்களை கற்றுக் கொள்ள காரணம், டைப்ரைட்டிங் கற்றுக் கொண்டதும், அதை கற்றுக் கொள்ள வைத்து தினமும் பத்துரூபாய் கொடுத்த ஜோதி அண்ணன் மட்டுமே காரணம்.
ஜோதி அண்ணன் பொதுவாக கலந்துரையாடும் பொழுது நன்றாக பேசினாலும், நெருக்கமாக பழகுவதற்கான நபர் அல்ல, பல வருடங்கள் எங்கள் குடும்ப நண்பராக இருந்தாலும் கணக்கில்லாமல் உதவிகள் செய்த்திருந்தாலும், இது நம்ம அண்ணன் டா அவருக்காக நாம்ம என்ன வேணுனாலும் செய்யலாம் என்று நெருக்கமான உறவாக மாற அவருடை குணம் அனுமதிக்கவில்லை, அதை அவர் ஏற்படுத்திக்கொண்டதும் இல்லை, அவருக்கு நெருக்கமான குடும்ப உறவு, நண்பர்கள் என்று எங்களுக்கு தெரிந்து அவருக்கு யாருமே இல்லை. கரூரில் மட்டும் அண்ணன் குடும்பம் இருப்பதை பல வருடங்கள் சொல்லிக்கொண்டே இருப்பார், ஆனால் ஒரு நாள் கூட அவர் கரூர் சென்றோ, இல்லை அவர்கள் வந்து இவரை பார்த்ததோ இல்லை.
கல்லூரி முடித்த பிறகு நான் சென்னைக்கு சென்று விட்டேன், ஊருக்கு வரும் பொழுது எதர்ச்சையாக அவரை பார்த்தல் தான் உண்டு, பார்த்தல் டீ சாப்பிடுறியா என்று கேட்பார். பாசக்காரர், ஆனால் நான் வேண்டாம் என்று சொல்லி விடுவேன்.
காவல் நிலையத்திலேயே இருந்ததால் அதனால் கிடைத்த நட்பு, பழக்க வழக்கங்கள், அதை சுற்றி இருக்கும் கடைகளின் நோம்பி காசு வாங்குவது, அது இது என்று சில பல, பல சில பலன்கள் மூலம் வாழ்ந்து கொண்டிருந்தார் ஆனால் ஸ்மார்ட் போன் வந்த பிறகு காலங்கள் மாற தொடங்கியது.
“தொழிலில் பல வருடங்களாக அப்பா கூடயே அனைத்து வேலைகளிலும் கூடவே இருந்த விசுவாசி, அப்பாவின் மறைவிற்கு பிறகு பொறுப்பேற்ற மகன் எப்படி அந்த விசுவாசியை எடுபிடியாக பார்ப்பாரோ”” அதே நிலை தான் ஜோதி அண்ணாவுக்கும் ஏற்பட்டது. "
பழக்க வழக்கங்கள் மூலம் வாழ்ந்து கொண்டிருந்தவர் 2015 லிருந்து 2024 வரை பிழைப்பதற்கே கடினம் ஆனது. நான் சம்பாரிக்க ஆரம்பித்தவுடன் நிறைய கமிட்மென்ட் இருந்தது, கடனும் இருந்தது, அதனால் அவரை எப்பொழுது எல்லாம் பார்ப்பேனோ அப்பொழுது எல்லாம் என்னால் முடிந்த 100, 200, 500 ரூபாய் வரை குடுப்பேன். நான் இருக்கும் நிலையில் அவ்வளவு தான் என்னாலையும் உதவி செய்ய முடிந்தது.
எங்கள் சொந்தத்தில் அனைவருக்குமே ஜோதி அண்ணாவை தெரியும், எங்களின் அனைத்து விசேஷங்களிலும் ஜோதி அண்ணன் கட்டாயம் இருப்பார். என் அக்காவின் திருமணத்தில் தொடங்கி, என் பையன் அகனின் காத்து குத்து வரை கலந்து கொண்டிருக்கிறார். செய்முறை செய்ய வேண்டிய முக்கியமான விசேஷங்களுக்கு அவருக்கு டிரஸ் எல்லாம் எடுத்துக்கொடுத்து கையில் பணம் கொடுத்து, முடிந்த வரை அவரை மறக்காமல் நாங்கள் செய்து கொண்டு தான் இருந்தோம்.
2023 ஜூன் மாதம் சொந்த ஊர் சென்றிந்த பொழுது எதர்ச்சையாக அவரை பார்த்தேன், ஜோதி அண்ணா என்று கத்தி கூப்பிட்டேன் காது கேட்கவில்லை, அருகில் சென்று தொட்டு கூப்பிட்டேன், ஜோதி அண்ணா நல்லாருக்கீங்களா என்று கேட்டேன், நல்லாருக்கேன் பா என்று குத்துமதிப்பாக சொன்னார். பார்வை குறைபாடு காரணமாகவும், வயதின் முதுமை காரணமாகவும் அவருக்கு என்னை முழுமையாக தெரியவில்லை?! அண்ணா நான் தான் அண்ணா கெளதம், அம்மணி பையன் என்று சொன்னேன், அட நீயப்பா நல்லாருக்கியா என்று கேட்டார், உடனே கெளம்ப எத்தனித்தார், உடனே கையில் ஒரு 500 ரூபாய் எடுத்துக் கொடுத்தேன் வாங்கி கொண்டார், எவ்வளவு என்று தெரியாமல் போய்விட்டால் என்ன ஆவது என்று இது 500 ரூபாய் என்று சொன்னேன், தெரியுது தெரியுது என்று சின்னதாக சல்யூட் போட்டுவிட்டு திரும்பி நடந்து சென்றார்.
அது தான் ஜோதி அண்ணன் அவ்வளவு தான் பழகுவார்.
அண்ணா இருங்க என்று இழுத்தி பிடித்தேன் என்ன சொல்லுபா என்றார், பணம் வேணும்னா என்னை கூப்பிடுங்க என்று என் மொபைல் என்னை எழுதி கொடுத்துவிட்டு வந்தேன், சரி என்று தலை ஆட்டினார்.
அதிலிருந்து பணம் வேண்டும் என்றால் என்னை கூப்பிட ஆரம்பிப்பார், மாதம் மாதம் அவருக்கு மொபைல் எண்ணிற்கு ரீசார்ஜ் செய்து விட்டுவிடுவேன், அவர் எப்பொழு எல்லாம் கேட்பாரோ அப்பொழுது எல்லாம் நான் பணம் அனுப்பி கொண்டே இருப்பேன், அதிகம் அனுப்பினால் சீக்கிரம் செலவு செய்து விடுவார் என்பதால் 200, 300, 100 என்று மட்டும் அனுப்பி விடுவேன்.
ஆரம்ப கால கட்டங்களில் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை தான் பணம் கேட்ப்பார் ஆனால் 2024 ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பணம் கேட்டு போன் செய்வார், அந்த மாதங்களில் நான் கடுமையான பண நெருக்கடியில் இருந்தேன், 100, 200 பணமே குடுக்க முடியாமல் இருந்தேன்,
ஒருமுறை போன் எடுத்து பணம் இல்லையே என்று சொன்னால் வயதின் காரணமாக அவருக்கு புரியாது போன் எடுக்க வில்லை என்றால் குறைந்தது 15 அல்லது 20 போன் செய்வார், நன்றாக சத்தம் போட்டு திட்டி சொன்னால் தான் மறுபடியும் போன் செய்ய மாட்டார்.
ஆனால் அவரை திட்டிய பிறகு அவர் எங்கள் வீட்டிற்கு செய்தது, எனக்கு செய்தது என்று வரிசையாக என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும், அப்பவும் மனசு கேட்காது நண்பர்களிடம் பணம் கேட்டு வாங்கி அடுத்த நாளே பணம் போட்டு விட்டு கூப்பிட்டு சொல்லிவிடுவேன் அப்பொழுது தான் மனம் ஓரளவு சரி ஆகும்.
ஒரு வருடத்தில் அவருக்கு ரீசார்ஜ் உட்பட நான் ரூபாய் 9,000 லிருந்து 10,000 வரை தான் அவருக்கு நான் பணம் அனுப்பி இருப்பேன். அவர் எங்களுக்கு செய்ததற்கு இந்த பணம் ஒரு சதவீதம் கூட இல்லையென்று தெரியும் ஆனால் என்னால் அவ்வளவு தான் முடிந்தது.
கடைசியாக 31st August 2024, 200 ரூபாய் பணம் அனுப்பினேன் அது தான் கடைசி அதற்க்கு பிறகு செப்டம்பர் மாதம் அவரிடம் இருந்து எனக்கு எந்த போன் காலும் வரவில்லை.
ஒரு 25 நாட்களுக்கு பிறகு என் அம்மாவிடம் சொன்னேன், ஜோதி அண்ணன் என்ன ஆனார் என்று தெரியல, நேர்ல போய் ஒரு எட்டு பார்த்து விட்டு வாம்மா என்றேன், அம்மாவும் சரி என்று சொன்னார்கள். அப்பவே அம்மா சொன்னார்கள், சில வருடங்களாகவே ஜோதி அண்ணன் தங்கியிருந்த அறையை பக்கத்துக்கு வீட்டு அம்மா புடுங்கி கொண்டார்கள் என்றும். அந்த வீட்டிற்கு முன்னாடி இருந்த மெடிக்கல் கடை வாசலில் தான் அவர் படுத்து தங்குகிறார் என்று.
அப்புறம் அக்டோபர் மாதம் 25 தேதி பக்கம் ஊருக்கு சென்றிருந்தேன். எதற்ச்சையாக ஜோதி அன்னான் பேச்சு வரும் போது அம்மா சொன்னார்கள், டேய் ஜோதி அண்ணன் செத்து போச்சாம் டா என்று.
என் மனம் ஒரு மாதிரி ஆனது!
FOPல் இருந்த ஒரு அக்கா தான் என் அம்மாவுக்கு தகவல் சொல்லி இருக்கிறார்கள்.
உடனே அந்த மெடிக்களுக்கு சென்று விசாரித்தேன். செப்டம்பர் 3rd 2024 இறக்கும் தருவாயில் அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செண்டிருக்கிறார்கள், அங்கு அவர் உயிர் பிரிந்திருக்கிறது என்று. கரூரில் அண்ணன் இருப்பதாக சொல்லி இருக்கிறார் ஆனால் சரியான விலாசம் இல்லை அதனால் அவரின் உடலை அங்கு கொண்டு சென்றார்களா இல்லை அரசு மருத்துவமனையிலே அடக்கம் செய்துவிட்டார்களா என்று தெரியவில்லை என்று மெடிக்கல் கடைக்காரர் கூறினார்.
கேட்ட பிறகு மனம் ஒரு மாதிரி இருந்தது, ஓரிடத்தில் வந்து அமர்ந்தேன், மனது அதிர்ச்சி அடைந்து, வருத்தப்பட்டு, அச்சச்சோ இப்படி ஆயிருச்சே, கடைசில யாருமே இல்லாம இப்படி அனாதையா போய்ட்டாரே என்று வருந்திக்கொண்டிருந்தேன், அப்போது தான் நியாபகம் வந்தது,
மோகன் குமாரமங்கலம், ரங்கராஜன் குமரங்கத்தின் தீவீர ஆதரவாளர், அவருக்கு சொந்தமான கட்டிடத்தில் தான் அவர் 30 வருடங்களுக்கு மேலாக வசித்த வந்தார். அந்த இடத்தைத்தான் சில வருடங்களுக்கு முன்பு பக்கத்துக்கு வீட்டு அம்மா மிரட்டி இவரை வெளிய அனுப்பி விட்டது. கடைசியில் ஜோதி அண்ணனுக்கு பிடித்தவரின் பெயர் கொண்ட “சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை” யில் தான் ஜோதி அண்ணனின் உயிர் பிரிந்திருக்கிறது என்று என் மனது நினைத்து சாந்தப்படுத்திக் கொண்டது.
பிறகு அம்மாவிற்கும், அக்காவிற்கும் தகவல் சொல்லி மனைவியின் ஊருக்கு பஸ் ஏறினேன் பயணம் முழுவது அவரின் நினைவு தான். அவர் செய்த உதவிகள் தான் நினைவுக்கு வந்தது, கடைசிக்காலத்தில் நம்மை சுற்றி இரத்த சொந்த குடும்ப உறவுகள் இல்லையென்றால், நீங்கள் எத்தனை நபர்களை சம்பாதித்து இருந்தாலும், பணம் எவ்வளவு இருந்தாலும் நீங்கள் அனாதை தான் என்று, அம்மா ஜெயலலிதாவின் அவர்கள் மரணத்திற்கு பிறகு ஜோதி அண்ணனின் மரணம் மீண்டும் எனக்கு உணர்த்தியது.
ஏற்கனவே எனக்கு உதவி செய்யும் மனப்பாங்கு நிறையவே இருக்கிறது. எதிர்காலத்தில் ஜோதி அண்ணனின் பெயரில் ஏதாவது ஒன்றை ஆரம்பித்து நிச்சயம் உதவ கடவுள் அருள் கிடைக்கும் என்று நம்புகிறேன். அப்பொழுது தான் அவரின் ஆத்மா சாந்தியடையும். அதுவே அவருக்கு நான் செய்யும் நன்றி கடன்!


ஜோதி அண்ணாவின் முழுப்பெயர் அருள்ஜோதி!
“அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!”
ஹேரி கெளதம்
(எழுதியது செப்டம்பர் 3, 2025)