மிஸ் யூ கேப்டன் 💔
Harry Gowtham
12/29/2023
என் வாழ்வில் நான் நேரில் பார்த்த முதல் நடிகரும், திரையுலக நட்சத்திரமும் அவர் தான். என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வை குடுத்த கேப்டனை என் வாழ்நாள் முழுவதும் நினைவுருவேன்.
விபரம் தெரிந்த பிறகு தான் அவர் தமிழ் திரையுலக வரலாற்றில் அழிக்க முடியாத எத்தனையோ தடங்களை பதித்திருக்கிறார் என்று.
உங்களின் ஆளுமை திறன், அஞ்சாத தைரியம், நேர்மை, மனிதாபிமானம், வள்ளல் குணம், யாவருக்கும் உதவும் குணம், தமிழ் பற்று என்று உங்கள் ரசிகர்களுக்கும், உங்களைப் பற்றி தெரிந்து கொள்பவர்களுக்கும் அதே தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு உங்கள் வரலாறு இருக்கிறது கேப்டன்.
அரசியலை விட மோசமானது தமிழ் திரையுலகம் அப்பேற்பட்ட களத்தில் பல ஆண்டுகள் கள்ளம் கபடம் இல்லாமல், சுயநலமாக இல்லாமல், மனிதாபிமானம் கொண்ட மாமனிதனாக பெயர் எடுத்து,
வாழ்ந்து, பல லட்சம் பேர்களின் கண்ணீர்கள் சூழ மடிவதெல்லாம் “தெய்வத்தின் மகன்” என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது?
கடவுளிடம் சென்று வாருங்கள் கேப்டன்! உங்களின் பெயரும், உங்களின் தர்மமும் தமிழ் போல் என்றும் நிலைத்திருக்கும்.
மிஸ் யூ கேப்டன்


பள்ளி பருவம் என்பதால் நான் இவருடைய ரசிகன் என்று எல்லாம் இல்லை கமல், ரஜினி, விஜயகாந்த் என்று மசாலா சினிமாக்கள் அனைத்தையும் கொண்டாடிய காலம், அதுவும் ஊர் திருவிழாக்களில் திரை கட்டி இரண்டு அல்லது மூன்று படம் போடுவார்கள் அப்படி போட்டால் நிச்சயம் அதில் விஜயகாந்த் படம் ஒன்று இருக்கும். எங்கள் ஊரில் விஜயகாந்த் ரசிகர் மன்றம் சிறப்பாக இயங்கி கொண்டிருந்தது.
கெளதம், விஜயகாந்த் ரசிகர் மன்றத்துல நாங்க எல்லாம் பேரு குடுத்துட்டோம் நீயும் குடுக்கறனா குடு, புது போர்டு வைக்கிறாங்க அதுல நம்ம எல்லார் பேரும் வரும்ன்னு நண்பர்கள் சொல்ல, ஏதோ நினைவில் பெயர் குடுத்துட்டு வந்தேன், பெயர் கொடுத்தது மட்டும் இல்லமா என்னோட சின்ன சைக்கிள்ல விஜயகாந்த் அவர்களின் கட்சிக் கொடியை (அப்பொழுது அவர் கட்சி ஆரம்பிக்கவில்லை) சைக்கிளின் பின் பகுதியில் பெயிண்டர் அண்ணாவிடம் குடுத்து கொடியையும் வரைந்து கொண்டு சந்தோசமாக வீட்டுக்கு போனேன். அவ்வளவு தான், வீட்லல சீமாறு பிஞ்சு போகாதது மட்டும் தான் பாக்கி, அம்மாகிட்ட அவ்வளவு திட்டு வாங்கினேன், அந்த கொடியை அழிச்சுட்டு வீட்டுக்கு வான்னு சொல்லிட்டாங்க, வேற வழி இல்லாம அழிக்க வேண்டியதா போச்சு
பள்ளி முடிந்து ஒருநாள் வீட்டுக்கு வரும் போது, எங்கள் ஊரில் நுழைவு வாயிலில் ரசிகர் மன்ற புது பலகையை வைத்திருந்தார்கள், இதை நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை என் பெயரை பார்த்ததும் அப்படி ஒரு ஆனந்தம், பள்ளியை விட்டு வரும் போதும், அந்த இடத்தை கடக்கும் போதும் நின்று என் பெயரை பார்த்து விட்டு தான் செல்வேன். கிட்டத்தட்ட ஆயிரம் தடவைக்கு மேல் பார்த்திருப்பேன், அப்படி ஒரு நாள் பார்த்து கொண்டிருக்கும் போது “டேய் கெளதம் நாங்கெல்லாம் விஜயகாந்த பார்க்க போறோம் வரியா? வரேன்னா அப்புறமா வந்து பாருன்னு சொல்லிகிட்டே ஒரு அண்ணா சைக்கிள்ல வேகமா போய்ட்டாரு” பொள்ளாச்சில சூட்டிங்! அம்மாகிட்ட கெஞ்சி, கூத்தாடி, பர்மிசன் வாங்கினேன் பொள்ளாச்சிக்கு வண்டி கெளம்புச்சு அதுல இருந்து கேப்டனா பார்க்குற வரைக்கும் அப்படி ஒரு இனம் புரியாத சந்தோசம்!
சூட்டிங் நடந்துட்டு இருக்கும், நாங்க ரசிகர் மன்றத்துல இருந்து வரோம் (எதோ பெரிய ரெக்கமென்டேஷன் மாதிரி) நாங்க வந்த உடனே கேப்டன் எங்கள வந்து பார்த்து போட்டோக்கு போஸ் குடுப்பர்ன்னு நினைச்சுகிட்டு இருந்தேன், ஆனா போக போக நிறைய ரசிகர் மன்றம் பஸ் வந்துட்டு இருந்துச்சு, பொள்ளாச்சி நெருங்க நெருங்க அத்தனை பஸ்கள், சூட்டிங் ஸ்பாட்டுக்கு முன்பு அவ்வளவு ட்ராபிக், எங்கு பார்த்தாலும் புரட்சி கலைஞர், கேப்டன் என்று ஒரே முழக்கம் தான், அப்பொழுதான் தெரிந்தது நாங்கள் மட்டும் அல்ல ஒட்டு மொத்த கொங்கு மண்டலம் ரசிகர் மன்றமே திரண்டு வந்திருக்கிறது என்று. அப்போதைய நிலவரப்படி கேப்டன் அவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் ரசிகர் மன்றங்கள் இருந்தது. வேறு எந்த நடிகர்களுக்கும் அவ்வளவு ரசிகர் மன்றங்கள் அப்பொழுது இல்லை.
நாங்கள் பார்க்க சென்ற போது “சொக்கதங்கம்” படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்து கொண்டிருந்தது, படப்பிடிப்பின் இடைவேளையில் ரசிகர்கள் கேப்டன் அவர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள், மிகப்பெரிய வரிசை கிட்டத்தட்ட லட்ச கணக்கில் இருப்பார்கள், எங்கள் அதிர்ஷ்டம், மன்றங்கள் அடிப்படையில் எங்களுக்கு சீக்கிரமாவே வாய்ப்பு கிடைத்தது. எங்கள் மன்றத்திற்கு பிறகு நேரம் இல்லாததால் அதற்க்கு பிறகு எந்த மன்றமும் போட்டோ எடுக்கவில்லை என்று பேசி கொண்டிருந்தார்கள்.
அது மண்டபமா இல்லை பெரிய ஹோட்டலா என்று சரியாக நினைவில்லை, வரிசையில் இருக்கும் பொழுது பார்க்க முடியாது, இரண்டு நபர்களுக்கு பிறகு போட்டோ எடுக்க போறோம் என்கிற பொழுது தான் கேப்டன்னையே பார்க்க முடியும் அது போன்ற ஒரு பாதுகாப்பான இடத்தில் ரசிகர் சந்திப்பு இருந்தது, இரண்டு நபர்களாக வலது, இடதுமாக போய் நிற்க வேண்டும், கேப்டன் நம் தோளில் கை போட்டு அரவணைத்து இருப்பார் “கிளிக்” அவ்வளவு தான் உடனே அடுத்த இரண்டு நபர்கள் பழனியில் முருகரை வழிபடுவது போல் தான், வரிசை நகர்ந்தது அடுத்து நானும் என் நண்பன் கிரியும் போய் நிற்க வேண்டும், கேப்டன் தரிசனம் கிடைத்தது செக்க செவேல்ன்னு முழு ஒப்பனையில் கேப்டன் இருந்தார் பார்த்தவுடன் “புல்லரித்தது” அடுத்தது எங்கள் முறை நானும் என் நண்பனும் போய் நின்றோம் எங்கள் தோள்களில் கை போட்டார் புகைப்படம் எடுக்க தயாரானோம் “அப்பொழுது தான் அந்த அதிசயம் நடந்தது மூன்று கேமிராக்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள், மூன்று கேமிராக்களிலும் “ரோல்” தீர்ந்த போய்விட்டது பதற்றத்துத்துடன் ரோலை மாற்றிக் கொண்டிருந்தார்கள் நான் அப்படியே அண்ணார்ந்து கேப்டனையே பார்த்து கொண்டிருந்தேன் ஒரு ஐந்து நொடி கழித்து “கேப்டன் என்னை பார்த்து சிறியதாக சிரித்தார் ” அதற்குள் கேமரா ரோல் போட்டு ரெடியாக இருந்தது “கிளிக்” அவ்வளவுதான், மற்றவர்களுக்கு 5 நொடி தான் நேரம் ஆனால் எங்களுக்கு கிட்டத்தட்ட ஒரு 45 நொடிகளுக்கு மேல் கிடைத்தது வெளியில் வந்து அதை அவ்வளவு பெருமையாக பேசிக் கொண்டிருந்தோம்.

